141 பேர் உயிரை பறித்த குஜராத் பாலம் சரிந்து விழுந்தது எப்படி? - நேரில் பார்த்தவர் பகீர் தகவல்

பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டும் என்றே பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர்.;

Update:2022-10-31 08:55 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.

சில மாதங்களுக்கு முன்பு அப்பாலம் மறுசீரமைக்கப்பட்டது. அப்பணி முடிந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று இரவு 'சத்' பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் பொத பொதவென விழுந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பாலம் இத்தனைக்கும் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றது தான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த பாலம் அறுந்து விழுந்தது தொடர்பாக நேரில் பார்த்த விஜய் கோஸ்வாமி என்பவர் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்வாமி கூறியதாவது:-

நேற்று பிற்பகலில் எனது குடும்பத்தினருடன் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்திற்கு சென்றேன். பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டும் என்றே பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர். இதனால், பாலத்தில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பக்கவாட்டில் எதையும் பிடிக்காமல் பாலத்தில் நிற்க முடியாத அளவுக்கு பாலத்தை இளைஞர்கள் குலுக்கி கொண்டிருந்தனர்.

இதனால் எதுவும் விபரீதம் நடந்து விடும் என்ற அச்சத்தில் நான் எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு பாலத்தின் பாதி வழியிலேயே திரும்பி விட்டேன். ஆனால், அச்சப்பட்டது போலவே பெரும் விபத்து நடைபெற்றுவிட்டது. விபத்துக்கு முன்பாக இது குறித்து அதிகாரிகளிடமும் நான் எச்சரித்தேன். ஆனால் டிக்கெட்டுகள் விற்பதில் மட்டுமே குறியாக இருந்த அதிகாரிகள் நான் கூறிய தகவலை காதில் போட்டுக்கொள்ளாமல் எனது பேச்சை அலட்சியம் செய்தனர்.

பாலத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் பாலத்தில் இருந்து திரும்பிய சில மணி நேரத்தில் இந்த பெரும் துயரம் நடந்து விட்டது" என்றார்.

இதற்கிடையே, பாலத்தின் கயிறை இளைஞர்கள் சில எட்டி உதைப்பதும் பாலத்தை பிடித்து ஆட்டும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்