உகாதி ஊர்வலத்தில் சோகம்... மின்சாரம் தாக்கி 13 குழந்தைகள் படுகாயம்
உகாதி பண்டிகை ஊர்வலத்தின் போது, தேர் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.;
கர்னூல்,
தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேகூர் கிராமத்தில் உகாதி பண்டிகை ஊர்வலத்தின் போது, தேர் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த குழந்தைகள் உடனடியாக கர்னூலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தனர். மேலும் அவர்களது காயங்கள் 10 சதவீதத்துக்கும் குறைவான தீவிரத்தன்மை கொண்டவை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒய்.எ.ஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் பன்யம் எம்.எ.ல்.ஏ.வுமான ராமபூபால் ரெட்டி மற்றும் நந்தியாலா தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பைரெட்டி ஷபரி ஆகியோர் காயமடைந்த குழந்தைகளை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த பைரெட்டி ஷபரி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.