'மோடி மீண்டும் பிரதமராக' வேண்டி 102 வயது மூதாட்டி நடைபயணம்
கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை பாராட்டியும், வாழ்த்தியும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள மாதேஸ்வரன் மலை. இங்கு பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கிறார்கள். சிலர் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி 102 வயது மூதாட்டி, மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
துமகூரு மாவட்டம் திப்தூரை சேர்ந்தவர் பர்வதம்மா (வயது 102). இவர் கடந்த 6 ஆண்டுகளாக மகாசிவராத்திரி விழாவையொட்டி மலை மாதேஸ்வரா சாமி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பர்வதம்மா, இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவையொட்டி நேற்று மாதேஸ்வரன் மலை அருகே உள்ள தலபெட்டா பகுதிக்கு உறவினர்களுடன் வந்தார். அவர் தள்ளாத வயதிலும் அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டார்.
அவரிடம் சில பக்தர்கள் எதற்காக இந்த வயதிலும் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்கிறீர்கள் என கேள்வி கேட்டனர். அதற்கு பர்வதம்மா, இந்த நாடும், நாட்டு மக்களும் நலமாக இருக்க வேண்டும்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அதுபோல் நல்ல மழை பெய்ய வேண்டும். அதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மலை மாதேஸ்வராவிடம் வேண்டுதல் வைக்க இருப்பதாகவும், அதனால் சிவராத்திரி விழாவையொட்டி நடைபயணம் மேற்கொள்வதாகவும் கூறினார்.
அப்போது அவருடன் நடைபயணம் மேற்கொண்ட பக்தர்கள், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நீங்கள் வேண்டுவது எதற்கு என கேள்வி எழுப்பினர். அதற்கு மூதாட்டி பர்வதம்மா, நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக மோடி பிரதமராக வர வேண்டும் என்றார். அதற்கு அந்த பக்தர்கள் உங்கள் ஆசியுடன் மோடி மீண்டும் பிரதமராக வருவார் என பர்வதம்மாவிடம் கூறினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கோரி 102 வயதில் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை பாராட்டியும், வாழ்த்தியும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.