திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தையும் தாண்டி வருகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கொரோனா தொற்று இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
197 ஆக உயர்வு
இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
திருப்பூர் சிவசுப்பிரமணி செட்டியார் தெருவை சேர்ந்த 74 வயது ஆண், இடுவாய் காமாட்சி அம்மன் கோவில் பின்புறத்தை சேர்ந்த 50 வயது பெண், காங்கேயம் கோவை ரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமி, அனுப்பர்பாளையம் காந்திரோட்டை சேர்ந்த 49 வயது ஆண், திருப்பூர் ஸ்ரீகணபதிநகரை சேர்ந்த 29 வயது பெண் ஆகிய 5 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த 5 பேரும் கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள். சிலர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக இருந்தது. இதில் 2 பேர் சேலத்தில் இருந்து திருப்பூருக்கு வந்ததால், அவர்களது பாதிப்பு கணக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி 192 ஆக திருப்பூர் மாவட்ட பாதிப்பு இருந்த நிலையில், நேற்று மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டதால், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.