தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி
தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது என்றால் சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது என்றால் சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
டிஜிட்டல் தாக்குதல்
தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்தது. இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருந்தால், இத்தனை ஆண்டுகள் எந்த தடையும் இன்றி எப்படி செயல்பட்டது. மத்திய அரசு முன்பே தடை விதிக்காதது ஏன்?. இந்த விஷயத்தில் தேச பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினால், மத்திய அரசின் நிலை என்ன?.
முந்தைய அரசுகளும் தேசிய தகவல்கள் நாட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதித்ததா?. செயலிகள் தடை விதிக்கப்பட்டதற்கு சீனா அதிருப்தி தெரிவித்து உள்ளது. எனினும் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கைவிட்டு செல்லவில்லை. 20 ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்த பிறகு தான் இந்திய தகவல்கள் திருடப்படுவதை மத்திய அரசு உணர்ந்து உள்ளது. டிஜிட்டல் தாக்குதல் நடத்தி அரசு சீனாவுக்கு பதிலடி கொடுத்து உள்ளது.
பா.ஜனதா டிக்டாக் பிரபலங்கள்
டிக்டாக் ஆபாசத்தை பரப்பியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் பல டிக்டாக் பிரபலங்கள் பா.ஜனதாவில் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு இனிமேல் என்ன நடக்கும்?. சீனாவை பொருளாதார ரீதியில் தாக்க வேண்டும். செயலிகளை தடை செய்வதால் அது நடக்காது. இது 2 நாடுகளுக்கு இடையே உள்ள முதலீடு மற்றும் வியாபாரம் சம்மந்தப்பட்டது. சீனா குஜராத்தில் அதிகம் முதலீடு செய்து உள்ளது. சீன நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்று உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் திறவு கோலாக உள்ள இந்த நிறுவனம் சீன கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உறவினருடையது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.