கொடைக்கானல்: வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு - கிராம மக்கள் அவதி
கொடைக்கானல் கீழானவயல் கிராமத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நீலகிரி,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள நட்சத்திர ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. கொடைக்கானல் மேல்மலை கிராமமான கீழானவயல் கிராமத்திற்கு விவசாய பாசனத்திற்கு பயன்படும் புலி பிடித்தான் கானல் நீர்தேக்கம் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் வெளியேறியது.
மரங்கள் வேரோடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதிக நீர்வரத்தால் நீர்த்தேக்கத்தின் கரை உடைந்து, கீழான வயல் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கீழானவயல் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.