'வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடக் கூடாது' - காங்கிரஸ் கட்சியை சாடிய உமர் அப்துல்லா

அரசியல் கட்சிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடக் கூடாது என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-15 11:16 GMT

ஸ்ரீநகர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடம் என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தேசிய மாநாடு கட்சிக்கு ஆதரவு கொடுத்த நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீரின் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இதற்கிடையில் காங்கிரஸ் மீது தேசிய மாநாடு கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து போதிய அளவில் பிரசார பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா வெளிப்படையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகம் நிலையானதாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இதே மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் எதிர்க்கட்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கிடைத்தபோது அதை கொண்டாடிவிட்டு, சில மாதங்களுக்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் எதிர்பார்த்த முடிவு வராவிட்டால் வாக்கு இயந்திரங்களை குறை சொல்வது சரியா?

அரசியல் கட்சிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடக் கூடாது. ஒரு நாள் வாக்காளர்கள் உங்களை தேர்ந்தெடுப்பார்கள், அடுத்த நாள் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். எங்கள் கட்சி மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. நான் ஒருபோதும் வாக்கு இயந்திரத்தை குறை சொன்னது இல்லை" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் உமர் அப்துல்லா பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்