திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் மற்றும் முககவசம் ஆகியவற்றை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் வழங்கினார்.
திருப்பூர்,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 476 பேர் எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுத 343 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலா 3 முககவசங்களை வழங்குமாறு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தேர்வுத்துறை முககவசங்களை திருப்பூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுசீட்டுகளை மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது.
அதன்படி மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுசீட்டு மற்றும் முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முன்னதாக முககவசம் அணிந்து வந்த மாணவிகள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஹால்டிக்கெட்
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ரமேஷ் தலைமை தாங்கி மாணவிகளுக்கு தலா 2 முககவசங்கள் மற்றும் தேர்வுக்கூட நுழைவுசீட்டை (ஹால்டிக்கெட்) வழங்கி பேசினார்.
அப்போது மாணவிகளான உங்கள் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். நீங்கள் பயம் எதுவும் இல்லாமல் தேர்வை எழுதலாம். தேர்வு அறைகள், இருக்கைகள், கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கைகளை கழுவி விட்டு தேர்வு அறைக்குள் நுழையும் வகையில் பள்ளியின் முன்பாக கைகழுவவும் மருந்தும், தண்ணீரும் வைக்கப்படும்.
தேர்வு தொடங்குவதற்கு ½ மணிநேரம் முன்னதாகவே மாணவிகள் பள்ளிக்கு வந்துவிட வேண்டும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை காண்பித்து பஸ்களில் நீங்கள் பயணம் செய்து தேர்வுக்கு வந்து சேரும் வகையில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து வரவேண்டும்.
இடையில் இன்னும் ஒரு முககவசம் வழங்கப்படும். இதை நீங்கள் தண்ணீரால் துவைத்து உபயோகப்படுத்தலாம் என்றார்.
ஹால் டிக்கெட் பெற வந்த மாணவிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி பெருக்கால் குழுவாக இணைந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.