நிலத்தடி நீர்மட்டம் உயர நீராதாரங்கள் நிரம்பும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்படுமா?

மதுரையில் மழைநீர் கட்டமைப்புகள் சரியாக கண்டு கொள்ளப்படாததால் பெய்யும் மழைநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. மாவட்ட நிர்வாகம் நீராதாரங்களில் நிரம்பும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறைப்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-06-06 03:14 GMT
மதுரை,

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பெய்த மழையின் அளவு 80 மி.மீ என்று கணக்கிடப்பட்டது. இந்த பெருமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு வணிக கட்டிடங்களின் அன்டர்கிரவுண்ட் என்று சொல்லப்படும் கீழ்த்தளங்கள் தண்ணீரால் சூழப்பட்டது. இந்த கட்டிடங்களில் தேங்கிய ஆயிரக்கணக்கான லிட்டர் மழைநீரை மோட்டார் கொண்டு இறைத்து வெளியேற்றும் அளவுக்கு நிலைமை இருந்தது.

மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சராசரி நிலத்தடி நீர்மட்டம் 400 அடிகளை தாண்டி விட்டது. தோண்டப்பட்ட 80 சதவீத ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் இல்லாததால் மக்கள் குளிக்கவும், துவைக்கவும், கழிப்பறைக்கும் மாநகராட்சி வழங்கும் குடிநீரை மோட்டார் மூலம் எடுத்து மேல்நிலை தொட்டிகளில் தேக்கி பயன்படுத்துகிறார்கள்.

நீராதாரங்கள்

தமிழகம் இயற்கையாகவே மழை மறைவு பகுதியாகும். இங்கு பருவத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்கும்போது மட்டுமே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். இதை அறிந்து தான் மதுரையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான குளங்களையும், ஏரிகளையும், கண்மாய்களையும் உருவாக்கி இருந்தார்கள். மதுரை நகரில் இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் சார்ந்து பெரிய குளங்கள் இருப்பதை காண முடியும்.

இதற்கு, டவுன்ஹால் ரோட்டில் உள்ள சிறு தெப்பக்குளம் ஒரு உதாரணம். இது கூடழலகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது. தற்போது குப்பைகளால் நிரம்பி வழிகிறது. இதேபோல், தல்லாகுளம் பகுதியில் திருமர்குளம் வறண்டு கிடக்கிறது. அழகப்பன் நகரில் இருக்கும் முத்துப்பட்டி கண்மாயின் நிலையும் இதுதான். இதில் விதிவிலக்காக, மாரியம்மன் தெப்பக்குளம் மட்டும் மாநகராட்சியின் கடைக்கண் பார்வையால் வைகை நீரால் அவ்வப்போது நிரம்புகிறது.

மழைநீர் சேகரிப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மழைநீர் சேமிப்பில் தீவிரம் காட்டினார். மழைநீர் சேகரிப்பு அமைக்காத கட்டிடத்திற்கு அனுமதி தரப்படாது என்று உத்தரவிட்டதால் பல ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் மழைநீர் சேமிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது உண்மை நிலவரம் என்னவென்றால் நகரின் பல அரசு கட்டிடங்களில் கூட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இல்லை என்பதும், பல கட்டிடங்களில் அது தூர்ந்து போய் கிடப்பதையும் காண முடிகிறது.

எனவே, மதுரையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நகரில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேமிப்புகளை ஆய்வு செய்வதுடன், அந்த கட்டிடங்களில் இருந்து வெளிே-றும் மழைநீர் ஆங்காங்கே இருக்கும் நீராதாரங்களில் நிரம்பும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கினால் நகரில் இருக்கும் பெருமாள் கோவில் தெப்பம், திருமர்குளம் போன்றவை நிரம்பி அழகாக காட்சியளிக்கும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உதவும். இதனை செய்யாவிட்டால் மதுரை மக்களுக்கு வைகை நீர் மட்டுமே தண்ணீருக்கான ஒரே ஆதாரமாக மாறிப்போகும் என்பதே உண்மை.

மேலும் செய்திகள்