3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

3 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-06-05 05:08 GMT
பெரம்பலூர், 

3 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூட்டை உடைத்து திருட்டு

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு கல்யாணி நகரை சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கார்த்திக் ராஜா(வயது 31). இவர் பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் கல்யாணி நகரில் உள்ள வாடகை கட்டிடத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டி விட்டு கார்த்திக் ராஜா வீடு திரும்பினார்.

நேற்று அதிகாலை ஓட்டலை திறக்க கார்த்திக் ராஜா வந்த போது, ஓட்டல் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஓட்டலின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது. இதையடுத்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், பிச்சை ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தடயங்கள் சேகரிப்பு

இதில் ஓட்டல் கதவின் பூட்டுகளை மர்மநபர்கள் கடப்பாரையால் நெம்பி உடைத்தது தெரியவந்தது. அந்த கடப்பாரையும் ஓட்டலுக்கு உள்ளேயே கிடந்தது. இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டது.

அதுவும் ஓட்டலில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் பணம் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் மர்மநபர்கள் அதே பகுதியில் உள்ள மற்றொரு ஓட்டலின் பூட்டை உடைத்து ரூ.800-ம், ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1,300-ம் திருடி சென்றதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் அந்தப்பகுதியில் உள்ள மற்ற கடைகளின் உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடைகளில் பணத்தை வைத்து செல்லக்கூடாதும் எனவும், கடைகளின் முன்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறும் உரிமையாளர்களை போலீசார் அறிவுறுத்தி சென்றனர்.

மேலும் செய்திகள்