69 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்புகிறது குமரியில் பஸ்கள் ஓட தொடங்கின பொதுமக்கள் மகிழ்ச்சி
கொரோனா ஊரடங்கால் 69 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்புகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்,
கொரோனா ஊரடங்கால் 69 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்புகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பஸ் போக்குவரத்து
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி உள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பஸ்கள் ஓட தொடங்கின. குமரி மாவட்டத்தில் 69 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் நேற்று 180 பஸ்கள் இயக்கப்பட்டன. மார்த்தாண்டம், குழித்துறை, கருங்கல், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, குளச்சல், மண்டைக்காடு, தக்கலை, இரணியல், தெரிசனங்கோப்பு, ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, தேங்காப்பட்டணம் மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
நெல்லை- தூத்துக்குடி
நாகர்கோவில்- நெல்லை இடையே 3 பஸ்களும், நாகர்கோவில்- தூத்துக்குடி இடையே (வள்ளியூர் திருச்செந்தூர் வழியாக) 2 பஸ்களும், நாகர்கோவில்- தூத்துக்குடி இடையே (உவரி திருச்செந்தூர் வழியாக) ஒரு பஸ்சும் இயக்கப்பட்டது. தென்காசிக்கு ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 12 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்தும் காலை 6 மணிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இரவு 8 மணி வரை பஸ் போக்குவரத்து இருந்தது.
நாகர்கோவிலை பொருத்தவரையில் அனைத்து பஸ்களும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. வெளிமாவட்ட பஸ்களும் இங்கிருந்தே சென்றன. வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. ஆனால் வடசேரி பஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பஸ்கள் நின்று சென்றன.
நிபந்தனைகள்
முன்னதாக அரசு நிபந்தனைகளின்படி ஒரு பஸ்சில் 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு பஸ்சிலும் டிரைவர், கண்டக்டர், பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர். சிலர் கைக்குட்டையை முக கவசமாக பயன்படுத்தினர். நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட்ட ஒரு சில பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்களில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்தும் மக்கள் பயணம் செய்தனர்.
குறிப்பாக நெல்லை செல்ல ஏராளமான பயணிகள் திரண்டனர். ஏராளமான மக்கள் வடசேரி பஸ் நிலையம் அருகே கூட்டமாக நின்றனர். நெல்லைக்கு வெறும் 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதே போல நாகர்கோவிலில் இருந்து தெரிசனங்கோப்பு செல்லவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக தெரிசனங்கோப்புக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் மக்கள் அதிகமாக சென்ற ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
மகிழ்ச்சி
அதே சமயம் நிறைய பஸ்களில் பயணிகள் மிகவும் குறைவாகவே இருந்தனர். ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் சென்ற பஸ்களில் பயணிகள் குறைவாகவே இருந்தனர். பஸ்களில் நோய் தொற்று வராமல் தடுக்க ஏற்கனவே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. எனினும் நேற்று ஒவ்வொரு இடங்களுக்கும் பஸ்கள் சென்று வந்த பிறகு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
வெகு நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் டிரைவர், கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பஸ்சுக்கு தடியங்காய் சுற்றி ஆரத்தி எடுத்தனர்.
வருமானம் குறைந்தது
இதுபற்றி போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் அரசு உத்தரவை கடைபிடித்து ஒரு பஸ்சில் 25 பயணிகள் மட்டும் பயணம் செய்வதால் வருமானம் குறைந்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பு ஒரு பஸ், ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றாலே 30 ரூபாய் வருமானம் கிடைக்கும். தற்போது 10 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது“ என்றார்.
பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா பஸ் நிலையத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பஸ்கள் வரவில்லை
தமிழக- கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு செங்கவிளை பகுதியில் கேரள போலீசார் சாலையை மறைத்து தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் மார்த்தாண்டன் துறை மீனவ கிராம பகுதி தனிமைபடுத்தப்பட்டு இருப்பதாலும் அடைக்காகுழி, சூழால், ஊரம்பு, சிலுவைபுரம், கண்ணனாகம் (கொல்லங்கோடு),மேட விளாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனினும் நித்திரவிளை பகுதியில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன.
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முதல் 47 பஸ்கள் இயக்கப்பட்டன. அவை நாகர்கோவில், குலசேகரம், குளச்சல், தேங்காப்பட்டணம், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றன. ஏற்கனவே பஸ் நிலையத்தின் இருபகுதிகளிலும் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. அவை ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டது.