கொரோனா சோதனை: கொலை வழக்கில் கைதானவர் சிறை முன்பு விடிய விடிய காத்திருப்பு
கொரோனா சோதனை நடத்தினால்தான் அனுமதி என்று அதிகாரிகள் கூறியதால் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறை முன்பு விடிய விடிய காத்திருந்தார்.
துடியலூர்,
கோவை நல்லாம்பாளையம் சரவணா நகரை சேர்ந்தவர் சென்னையன் (வயது 42), கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த அசோக்குமாருக்கும் (32) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அசோக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சென்னையனை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், தப்பி ஓடிய அசோக்குமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அசோக்குமாரை போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர்.
சிறைக்குள் அனுமதிக்க மறுப்பு
பின்னர் போலீசார் அசோக்குமாரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை அவினாசி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனே போலீசார் அசோக்குமாரை பலத்த பாதுகாப்புடன் அவினாசிக்கு வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அங்கு அவரை கிளை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அப்போது சிறைத்துறை அதிகாரிகள், அசோக்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே சிறையில் அடைக்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விடிய விடிய காத்திருப்பு
பின்னர் அவர்கள் அசோக்குமாருடன் அந்த சிறை முன்பு விடிய விடிய வாகனத்திலேயே காத்திருந்தனர். அதன் பிறகு அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் கூறும்போது, அசோக்குமாரின் ரத்தம் மற்றும் சளி மாதிரியின் பரிசோதனை அறிக்கை இன்று (புதன்கிழமை) மதியத்துக்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அறிக்கை வந்ததும், அவரை சிறையில் அடைக்க முடிவு செய்து உள்ளோம். தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் உள்ளார் என்றனர்.