நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104 அடியை தாண்டியது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104 அடியை தாண்டியது.

Update: 2019-12-08 22:30 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104 அடியை தாண்டியது.

மலைப்பகுதியில் மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ெதாடர்ந்து மழை ெபய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது வெள்ளம் குறைந்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

பாபநாசம் அணை

பாபநாசம் அணை பகுதியில் 34 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,660 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 2,448 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.13 அடியாக உள்ளது.

மாஞ்சோலை தோட்ட பகுதியில் உள்ள காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் ெமாத்த உயரம் 118 அடியாகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் ெவளிேயற்றப்படவில்லை.

குற்றாலம் அருவி

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அருவிகளில் சீரான நீர்வரத்து உள்ளது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் தினமும் ஏராளமானோர் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் கூட்டம் குற்றாலத்தில் அதிக அளவில் இருந்தது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை வெயில் அடித்தது. பகல் 12 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்- 34, சேர்வலாறு- 50, மணிமுத்தாறு- 28, கொடுமுடியாறு- 20, கடனாநதி- 30, ராமநதி- 40, கருப்பாநதி- 6, குண்டாறு- 4, அம்பை- 12.30, சேரன்மாதேவி- 6, நாங்குநேரி- 11, பாளையங்கோட்டை- 7, ராதாபுரம்- 1.20, நெல்லை- 4, ஆய்குடி- 9.40, செங்கோட்டை- 1, சிவகிரி- 30, தென்காசி- 10.30.

மேலும் செய்திகள்