தென்காசி புதிய மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார் விழா நடக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்

தென்காசி புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த விழா நடக்கும் இடத்தை கலெக்டர் ‌ஷில்பா பார்வையிட்டார்.

Update: 2019-11-16 23:00 GMT
தென்காசி, 

தென்காசி புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த விழா நடக்கும் இடத்தை கலெக்டர் ‌ஷில்பா பார்வையிட்டார்.

தென்காசி புதிய மாவட்டம்

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட வரையறை குறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 உதவி கலெக்டர் அலுவலகங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்களும், பல கிராமங்களும் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக அருண்சுந்தர் தயாளனும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சுகுணாசிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

இதையடுத்து தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா தென்காசியில் வருகிற 22-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தென்காசியில் புதிய மாவட்ட தொடக்க விழா நடக்கும் இடத்தை கலெக்டர் ‌ஷில்பா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 21-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு இரவில் தங்குகிறார். 22-ந்தேதி காலையில் தூத்துக்குடியில் இருந்து காரில் தென்காசிக்கு வந்து, புதிய மாவட்ட தொடக்க விழாவில் பங்கேற்கிறார். விழாவில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சிப்பணிகளை திறந்து வைக்கிறார்.

சுரண்டை அரசு கல்லூரிக்கு ரூ.2 கோடி செலவிலும், பாவூர்சத்திரம் அவ்வையார் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3½ கோடி செலவிலும், ஆவுடையானூர் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2¼ கோடி செலவிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அவர் திறந்து வைக்கிறார்.

மேலும் செய்திகள்