கோவை முத்தாரம்மன் கோவில் தசரா விழா: சாமி வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்தாரம்மனை பக்தர்கள் வணங்கி சென்றனர்.;

Update: 2024-10-08 04:24 GMT

கோவை,

கோவை சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதியில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருப்பார்கள். தொடர்ந்து காப்புக்கட்டி சாமி உள்பட பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக செல்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கடந்த 2-ந் தேதி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றமும், 10.30 மணிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 5-ம் திருவிழாவான நேற்று ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்தாரம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்ந்து மாலையணிந்து காப்புக்கட்டிய பக்தர்கள் காளி, விஷ்ணு, முருகன், சுடலை மாடன், விநாயகர். சிவன், பார்வதி, அனுமன் உள்பட பல்வேறு சாமிகளின் வேடமும், சிலர் ராணுவ வீரர், போலீஸ்காரர் என பிற வேடங்கள் அணிந்தும் வந்தனர். இதையடுத்து கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு வேடமணிந்து வந்த பக்தர்கள் அந்த பகுதியில் ஊர்வலமாக சென்றனர். வருகிற 12-ந் தேதி வரை கோவை தசரா குழுவை சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு நாளும் வேடமிட்டு ஊர்வலம் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்