குறுகிய இடத்திலும் செடிகளை வளர்க்கலாம்..!

கேரளாவைச் சேர்ந்த இல்லத்தரசியான மினி ஸ்ரீகுமாருக்கு தோட்டக்கலையில் அதிக விருப்பம். தன் வீட்டைச் சுற்றியுள்ள மிகக் குறைந்த இடத்தில், 50 வகையான காய்கறிகளை வளர்த்து வருகிறார்.

Update: 2022-11-05 09:29 GMT

பொதுவாக நகரங்களில் வசிக்கும் மக்களுக்குச் சொந்தமாக வீட்டுத் தோட்டம் அமைக்க இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆனால், திருக்காக்கராவைச் சேர்ந்த மினி ஸ்ரீகுமாருக்கு வீட்டைச் சுற்றியுள்ள சிறிய இடத்தில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு இடப்பற்றாக்குறை பிரச்சினையாக இருக்கவில்லை.

"நீங்கள் சொந்தமாக எதையாவது வளர்க்கத் தொடங்க, அதிக இடம் தேவையில்லை. காய்கறிகள், பழங்கள் அல்லது அலங்காரச் செடிகள் என எதுவாக இருந்தாலும், அதை வளர்ப்பதற்கு வீட்டில் சிறிய மூலையாவது கிடைக்கும். நான் செய்ததுபோல் கிடைக்கும் இடத்தைப் பயன்படுத்தி தோட்டம் அமைக்கலாம். வீட்டில் மொட்டை மாடி கிடையாது. எனவே காய்கறிகளை என் வீட்டைச் சுற்றி இருக்கும் மிக குறுகிய இடத்தில் வளர்க்க திட்டமிட்டேன்" என்கிறார்.

ஆலப்புழாவில் உள்ள காயங்குளத்தில் வளர்ந்த மினியின் தந்தை அரசு ஊழியர். விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். நிலத்தில் அவர் உழைப்பதைப் பார்த்த மகள் மினிக்கும் தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு, மினியும் அவரது கணவர் ஸ்ரீகுமாரும் எர்ணாகுளத்தில் உள்ள திருக்காக்கராவில் சொந்த வீட்டைக் கட்டினர். இடம் குறைவாக இருந்தாலும்கூட, தன் வீட்டைச் சுற்றி ஒருசில காய்கறிகளையாவது பயிரிடுவதை வழக்கமாக்கினார். கொரோனா ஊரடங்குக் காலம்தான் அவர் முழுமையாக விவசாயத்தில் ஈடுபட காரணமாக அமைந்தது.

மினியின் வீட்டு மூலை முடுக்குகளிலும், வாசல் பகுதியிலும் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், சீன உருளைக்கிழங்கு, பாகற்காய், கீரை, முருங்கை எனப் பலவற்றையும் வளர்க்கிறார். வீட்டை சுற்றி இருக்கும் சின்ன சின்ன இடங்களில் எல்லாம் மா, பலா, கொய்யா, பப்பாளி போன்ற பழ மரங்களையும் வைத்திருக்கிறார்.

"உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைத் தவிர, நான் சமையலறையில் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளையும் என்னால் வளர்க்கமுடிந்தது" என்று அவர் நம்பிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறார். விதைப்பதற்கு முன் அல்லது மரக்கன்று நடுவதற்கு முன், மாட்டு சாணப் பொடி, வேப்பம் புண்ணாக்கு மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து மண்ணைத் தயார் செய்கிறார்.

"ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் எதுவும் பயன்படுத்தியதில்லை. மாறாக, என் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றி, செடிகளுக்குப் பயன்படுத்துகிறேன்" என்கிறார் மினி.

மிகக் குறைந்த இடத்தில் என்னால் இவ்வளவு வளர்க்கமுடிந்தால், சுதந்திரமான இடங்கள் அல்லது மொட்டை மாடிகளைக் கொண்டவர்கள் எவ்வளவு வளர்க்கமுடியும் என்றும் அவர் புன்னகையுடன் கேள்வி எழுப்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்