அயோத்தி ராமர் கோவில்: 28 மொழிகளில் பெயர் பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்

பெயர் பலகையில் 28 மொழிகளில் - 22 இந்திய மற்றும் 6 வெளிநாட்டு மொழிகளில் இருக்கும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-12 12:31 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மக்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் வசதிக்கு ஏற்ப 28 மொழிகளில் பெயர் பலகையை அயோத்தி மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளனர். இந்த பலகையில் 28 மொழிகளில் - 22 இந்திய மற்றும் 6 வெளிநாட்டு மொழிகளில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு மொழிகளில் அரபு, சீனம், பிரஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவை அடங்கும். மேலும் இந்திய மொழிகள் இந்தி, உருது, அசாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, குஜராத்தி, டோக்ரி, தமிழ், தெலுங்கு, நேபாளீஸ், பஞ்சாபி, பங்களா, போடோ, மணிப்பூரி, மராத்தி, மலையாளம், மைதிலி, சந்தாலி, சமஸ்கிருதம் மற்றும் சிந்தி.

இதுவரை, ஹனுமான் கர்ஹி, கனக் பவன், ராம் கி பாடி, அயோத்தி தாம் சந்திப்பு, தேதி பஜார் மற்றும் அயோத்தி விமான நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மற்ற நியமிக்கப்பட்ட இடங்களில் அவற்றை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 22-ம் தேதிக்குள் முடிவடையும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்