அயோத்தியில் ஏற்றப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி.. நகர் முழுவதும் பரவும் நறுமணம்
இந்த ஊதுவத்தியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை வாசனை வீசும் என்று கூறப்படுகிறது.;
அயோத்தி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமானோர் பரிசு பொருட்கள் மற்றும் காணிக்கைகளை அனுப்பி உள்ளனர்.
அவ்வகையில் குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3,610 கிலோ எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட இந்த வாசனை ஊதுவத்தி இன்று ஏற்றப்பட்டது. இதன்மூலம் அயோத்தியில் நறுமணம் பரவத் தொடங்கியது.
ஊதுவத்தியை ஏற்றியபோது பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பினர். இந்த ஊதுவத்தியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை வாசனை வீசும் என்று கூறப்படுகிறது. இந்த ஊதுவத்தி முழுவதும் எரிய ஒன்றரை மாதம் ஆகும்.