உலக பேட்மிண்டன் தரவரிசை: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்


உலக பேட்மிண்டன் தரவரிசை: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 25 July 2023 7:30 PM GMT (Updated: 25 July 2023 7:32 PM GMT)

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் தொடருகிறார்.

புதுடெல்லி,

பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (87,211 புள்ளிகள்) இணை 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. சாத்விக்-சிராக் ஜோடியின் சிறந்த தரநிலை இதுவாகும். கடந்த வாரம் கொரியா ஓபன் அரைஇறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த லியாங் வெய் கெங்-வாங் சாங் இணையை வீழ்த்திய சாத்விக்-சிராக் கூட்டணி இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் இணைக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டம் வென்றதுடன் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை சுவைத்தது. இதன் மூலம் இந்திய ஜோடி ஒரு இடம் ஏற்றம் கண்டுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய இணையிடம் தோற்ற இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்-முகமது ரியான் அட்ரியான்டோ ஜோடி (91,929 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய் 10-வது இடத்தை தக்கவைத்துள்ளார். கனடா ஓபனை வென்றதுடன் கொரியா ஓபன் போட்டியில் இருந்து விலகிய இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் ஒரு இடம் சறுக்கி 13-வது இடம் பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 20-வது இடத்தில் மாற்றமின்றி நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகானே யமாகுச்சி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார். இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து 17-வது இடத்திலும், சாய்னா நேவால் ஒரு இடம் சரிந்து 37-வது இடத்திலும் உள்ளனர்.


Next Story