'அன்று நான்; இன்று நீரஜ்' - அஞ்சு ஜார்ஜ் நெகிழ்ச்சி


அன்று நான்; இன்று நீரஜ் - அஞ்சு ஜார்ஜ் நெகிழ்ச்சி
x

2003-ம் ஆண்டு எந்த மாதிரியான சூழலில் நான் இருந்தேனோ அதே போன்று நீரஜ் சோப்ராவும் இருந்ததை பார்த்தேன் என்று அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உலக தடகளத்தில் முதல்முறையாக இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் அஞ்சு ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இருந்தார். அவர் நேற்று அளித்த பேட்டியில், 'உலக தடகளத்தில் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளத்தில் எந்த மாதிரியான சூழலில் நான் இருந்தேனோ அதே போன்று நீரஜ் சோப்ராவும் இருந்ததை பார்த்தேன். அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். முதல் 3 ரவுண்டுக்கு பிறகு அவர் 4-வது இடத்தில் இருந்தார். நானும் அந்த சமயத்தில் முதல் 3 ரவுண்டுகளுக்கு பிறகு 4-வது இடத்தில் தான் இருந்தேன். அதன் பிறகு மனஉறுதியுடன் போராடி பதக்கம் வென்றேன். அதே போன்று இப்போது நீரஜ் சோப்ராவும் செய்திருக்கிறார்.

ஒலிம்பிக்கில் சாம்பியன், இப்போது உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம். இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாகும். உலகின் மிகவும் கடினமான போட்டிகளில் தடகளமும் ஒன்று. ஏனெனில் இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. அதனால் உலக தடகளத்தில் பதக்கம் வெல்வது எளிதானது அல்ல. அவர் நெருக்கடியையும், கடினமான சீதோஷ்ண நிலையையும் கையாண்ட விதம் அருமை. மீண்டும் மீண்டும் அவர் தேசத்தை பெருமைப்பட வைத்திருக்கிறார். எல்லா காலத்திலும் இந்தியாவின் மிகச்சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா தான் என்று சொல்ல முடியும்.

உலக தடகளத்தில் 2-வது பதக்கத்துக்காக நாம் நீண்ட காலம் அதாவது 19 ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறோம். இப்போது அடுத்த பதக்கத்துக்கு நாம் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியது இருக்காது என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்வார். விரைவில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டிலும் வாகை சூடுவார் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story