பிரக்ஞானந்தாவின் தாயை பாராட்டிய காஸ்பரோவ்


பிரக்ஞானந்தாவின் தாயை பாராட்டிய காஸ்பரோவ்
x

பிரக்ஞானந்தாவுக்கு செஸ் உலகின் ஜாம்பவான், முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் (ரஷியா) பாராட்டு தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜானில் நடந்து வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய இளம் புயல் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானா காருவானாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 2002-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் போட்டியில் இறுதிசுற்றை எட்டிய இந்தியர் என்ற மகத்தான சிறப்பை பெற்றுள்ள 18 வயதான பிரக்ஞானந்தா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

இவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர். இதனால் தாயார் நாகலட்சுமி தான் அவரை போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வார். தற்போது கூட மகனின் வெற்றியை தூரம் நின்று ரசிக்கிற நாகலட்சுமியின் பூரிப்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

பிரக்ஞானந்தாவுக்கு செஸ் உலகின் ஜாம்பவான், முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் (ரஷியா) பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிரக்ஞானந்தாவுக்கும், அவரது தாயாருக்கும் வாழ்த்துகள். நான் விளையாடிய காலத்தில் எனது அம்மா எல்லா போட்டிகளுக்கும் என்னுடன் வந்திருக்கிறார் என்ற முறையில் பெருமையோடு சொல்கிறேன். அம்மாவின் ஆதரவு தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த தொடரில் இந்த சென்னை இளைஞர், இரு நியூயார்க் வீரர்களை சாய்த்துள்ளார். மிகவும் சிக்கலான தருணங்களிலும் கூட பிரக்ஞானந்தா எளிதில் விட்டு விடாமல் மனஉறுதியுடன் இருக்கிறார்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

வங்கி ஊழியரான பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறுகையில், 'எல்லா சிறப்பும் எனது மனைவிக்கு தான் கொடுக்கப்பட வேண்டும். அவர் தான் போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அவருடன் செல்கிறார். எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கிறார். பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி (இவரும் செஸ் வீராங்கனை தான்) இருவரையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார். சிறு வயதில் வைஷாலி அதிகமாக டி.வி. பார்ப்பார். அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக வைஷாலியை செஸ் விளையாட்டு பக்கம் திருப்பினேன். அவர் மூலம் பிரக்ஞானந்தாவுக்கும் செஸ் ஆர்வம் வந்தது. தற்போது இருவரும் உற்சாகமாக செஸ் விளையாடி சாதிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.


Next Story