தூத்துக்குடியில் ஜூனியர் தடகள போட்டி- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.
தடகள போட்டி
தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 18-வது ஜூனியர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
போட்டி தொடக்க விழாவுக்கு தடகள விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
சாதனையாளராக...
அப்போது, மாணவ- மாணவிகளுக்கு கல்வியோடு விளையாட்டு பயிற்சிகளும் முக்கியமானதாகும். வெற்றி-தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் ஆகும். தோல்வியை கண்டு சோர்வடையாமல், அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான அடிப்படை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம்.
நமது ஆரோக்கியமே நமக்கு மிகப்பெரிய சொத்தாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வலிமையானது, உங்களது நல்ல எண்ணங்களே உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும். ஆகவே மாணவ- மாணவிகளாகிய நீங்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனையாளர்களாக வரவேண்டும், என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்க பொருளாளர் அருள் சகாயம், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.