ஸ்பெயின் தொடர்; இந்திய ஆண்கள் ஆக்கி அணி போராடி தோல்வி


ஸ்பெயின் தொடர்; இந்திய ஆண்கள் ஆக்கி அணி போராடி தோல்வி
x

image courtesy; twitter/@TheHockeyIndia

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

டெல்லி,

ஸ்பெயின் ஆக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஆக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்று உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.

நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தொடரை நடத்தும் ஸ்பெயின் அணியுடன் மோதியது. சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுக்கட்டின. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் 11-வது நிமிடத்தில் இந்திய அணியின் தடுப்பை மீறி ஸ்பெயின் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் பாவ் குனில் கோல் அடித்தார்.

இதன் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியின் தடுப்பை மீறி இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சளைக்காமல் மல்லுக்கட்டியது. இருப்பினும் ஸ்பெயின் அணியின் கோல் கீப்பரை தாண்டி இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் ஸ்பெயின் அணி மற்றொரு கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணி வீரர் ஜோவாகின் மெனினி 2-வது கோலை அடித்தார்.

கடைசி வரை போராடிய இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் ஆறுதலாக ஒரு கோல் அடித்தார். அதற்கு மேல் இந்திய அணியை கோல் அடிக்க விடாமல் ஸ்பெயின் அணி தடுத்துக் கொண்டது . ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்திய அணி தனது 2-வது போட்டியில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.


Next Story