உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: ஸ்பெயின் அணியை வீழ்த்தி 'சி' பிரிவில் முதலிடம் பிடித்த ஜப்பான்


உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: ஸ்பெயின் அணியை வீழ்த்தி சி பிரிவில் முதலிடம் பிடித்த ஜப்பான்
x

image courtesy; twitter/@FIFAWWC

இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

வெலிங்டன்,

9-வது உலக கோப்பை மகளிர் கால்பந்து திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடின. இரு அணிகளும் ஏற்கனவே 2-வது சுற்றிற்கு தகுதி பெற்று விட்டன.

இந்நிலையில் தங்களது பிரிவில் முதலிடம் பிடிப்பதற்காக இரு அணிகளும் மல்லுக்கட்டின. இந்த போட்டியில் சமன் செய்தாலே ஸ்பெயின் அணி முதலிடத்திற்கு முன்னேறிவிடும் என்ற சூழ்நிலையில் களம் இறங்கியது. ஆனால் முதல் பாதியிலேயே ஜப்பான் அணி, ஸ்பெயின் அணியை மிரள வைத்தது. முதல் பாதி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட ஜப்பான் அணி 3 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.

இதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்தது. ஜப்பான் அணியை விட ஸ்பெயின் அணியிடம் தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது. இருப்பினும் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. முழு நேர ஆட்ட முடிவில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 'சி' பிரிவில் முதலிடம் பிடித்தது. ஜப்பான் அணி தரப்பில் ஹினட்டா மியாசவா இரண்டு கோல்களும், ரிகோ யுகி மற்றும் மினா தனகா தலா ஒரு கோலும் அடித்தனர்.

உலக கோப்பை தொடரில் ஆசிய நாடுகளின் அணிக்கு எதிராக ஸ்பெயின் அணியின் சோகம் தொடருகிறது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சீனாவுக்கு எதிராக சமன் மற்றும் தற்போது ஜப்பான் அணிக்கு எதிராக தோல்வி கண்டுள்ளது.

உலக கோப்பை வரலாற்றில் ஜப்பான் அணி 4 முறையும், ஸ்பெயின் அணி 2 முறையும் அடுத்த சுற்றிற்கு முன்னேறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story