பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஜப்பான் அணிகள் அபார வெற்றி


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஜப்பான் அணிகள் அபார வெற்றி
x

கோப்புப்படம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா, ஜப்பான் அணிகள் அபார வெற்றி பெற்றன.

ஆக்லாந்து,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

3-வது நாளான நேற்று 4 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நடந்த ஆட்டத்தில் (இ பிரிவு) நடப்பு சாம்பியன் அமெரிக்கா, அறிமுக அணியான வியட்நாமை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. அமெரிக்க அணி தரப்பில் சோபியா சுமித் 14-வது, 45-வது நிமிடங்களிலும், லிண்ட்சே ஹோரான் 77-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

அமெரிக்க அணியின் கடும் சவாலை எதிர்த்து கடைசி வரை போராடிய வியட்நாம் தனது சிறப்பான தடுப்பு ஆட்டத்தின் மூலம் அதிக கோல் வாங்காமல் தற்காத்தது. வியட்நாம் அணியின் கோல் கீப்பர் டிரான் தி கிம், முதல் பாதியில் அமெரிக்க வீராங்கனை அலெக்ஸ் மோர்கன் பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க எடுத்த முயற்சியை அபாரமாக முறியடித்து அசத்தினார்.

ஹாமில்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (சி பிரிவு) முன்னாள் சாம்பியன் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான ஜாம்பியாவை பந்தாடி போட்டியை வெற்றிகரமாக தொடங்கியது. ஜப்பான் அணியில் ஹினடா மியாஸ்வா (43-வது, 62-வது நிமிடம்) 2 கோலும், மினா தனகா (55-வது நிமிடம்), ஜூன் என்டோ (71-வது நிமிடம்), ரிகோ உகி (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும் போட்டனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் (டி பிரிவு) இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதீ அணியை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை இங்கிலாந்து வீராங்கனை ஜார்ஜியா ஸ்டான்வே 29-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அடித்தார். 81-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்ப ஹைதீ மாற்று வீராங்கனை ரோஸ்லின் எடுத்த முயற்சியை, இங்கிலாந்து கோல்கீப்பர் மேரி எர்ப்ஸ் தடுத்து நிறுத்தினார்.

இதேபிரிவில் பெர்த்தில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை சாய்த்தது. 89-வது நிமிடத்தில் டென்மார்க் வீராங்கனை அமலி வார்க்ஸ்காட் வெற்றிக்கான கோலை அடித்தார்.

இன்றைய ஆட்டங்களில் சுவீடன்-தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து-போர்ச்சுகல், பிரான்ஸ்-ஜமைக்கா அணிகள் மோதுகின்றன.


Next Story