ஆசிய விளையாட்டு கால்பந்தில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்


ஆசிய விளையாட்டு கால்பந்தில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்
x

ஆசிய விளையாட்டு போட்டியில் கால்பந்து போட்டி இன்று தொடங்கி அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதில் கால்பந்து போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் 4 சிறந்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.

இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை சந்திக்கிறது. ஐ.எஸ்.எல். கிளப் நிர்வாகங்கள் வீரர்களை விடுவிப்பதில் எழுந்த பிரச்சினை காரணமாக கடைசி கட்டத்தில் வீரர்களை மாற்றி அறிவித்ததால் கூட்டாக போதிய பயிற்சியில் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட இந்திய கால்பந்து அணி நேற்று முன்தினம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. 'விசா' பிரச்சினை காரணமாக பின்கள வீரர்கள் கோன்சாம் சிங்லென்சனா சிங், லால்சுங்நுன்கா ஆகியோர் அணியினருடன் செல்லவில்லை. அவர்களுக்கு எக்ஸ்பிரஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், ஓரிரு நாளில் சீனா செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூத்த வீரர்கள் சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜின்கான் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள் என்று தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் தெரிவித்துள்ளார். போதிய ஓய்வு மற்றும் பயிற்சி இல்லாததுடன் சில முன்னணி வீரர்கள் இன்றி களம் காணுவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டத்தில் வலுவான சீனாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதே போல் வருகிற 21-ந்தேதி தொடங்கும் பெண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் சீனதைபே, தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய பெண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் சீனதைபேயை வருகிற 21-ந்தேதி சந்திக்கிறது.


Next Story