கம்பீர் தேர்வு செய்த உலக லெவன் அணி - 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு இடம்


கம்பீர் தேர்வு செய்த உலக லெவன் அணி - 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு இடம்
x

Image : BCCI 

கம்பீர் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர் 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு கவுதம் கம்பீர் பேட்டி கொடுத்தார். அப்போது கவுதம் கம்பீர் உலக கிரிக்கெட்டில் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து உலக லெவன் அணியை தேர்வு செய்தார். இந்த லெவனில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணியில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

இந்த அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்சும், 4வது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரவும், 5வது இடத்தில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கும், 6வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸூம் இடம் பெற்றுள்ளனர்.

7 முதல் 11 இடங்களில் முறையே பாகிஸ்தானின் அப்துல் ரசாக், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாப், இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் சோயப் அக்தர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீர் தேர்ந்தெடுத்திருக்கும் உலக ஆடும் லெவன்:

ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ஏபி டி வில்லியர்ஸ், பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், அப்துல் ரசாக், ஆண்ட்ரூ பிளின்டாஃப், முத்தையா முரளிதரன், சோயப் அக்தர் மற்றும் மோர்னே மோர்கல்.

கம்பீர் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து உலக லெவன் அணியை தேர்வு செய்ததால் இந்திய வீரர்கள் யாரும் இந்த அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story