உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதல்!


உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதல்!
x
தினத்தந்தி 9 Nov 2023 3:01 AM GMT (Updated: 9 Nov 2023 3:04 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை துவம்சம் செய்து தனது பயணத்தை கம்பீரமாக தொடங்கியது. அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இன்றைய ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்றால் 3 அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது அரையிறுதிக்குள் நுழைவது யார்? என்பதை ரன்-ரேட் தான் தீர்மானிக்கும். ரன்-ரேட்டில் நியூசிலாந்து வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்கும்.

ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோற்று, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக்கில் வீழ்ந்தால் 3 அணிகளும் 8 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போதும் ரன்-ரேட் தான் அரையிறுதி வாய்ப்பை முடிவு செய்யும். எந்த முடிவு கிடைத்தாலும் நியூசிலாந்து தங்களது நிலையை உறுதி செய்ய இரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

முன்னாள் சாம்பியனான இலங்கை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (நெதர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிராக), 6 தோல்வி (தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிராக) அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. ஆறுதல் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story