உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 9-வது லீக்கில் போட்டியை நடத்தும் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 199 ரன்னில் சுருட்டி, அந்த இலக்கை 41.2 ஓவர்களில் இந்தியா எட்டிப்பிடித்து அசத்தியது. விராட் கோலி, லோகேஷ் ராகுலின் அரைசதமும், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் சுழல் ஜாலமும் வெற்றியை எளிதாக்கின. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் களம் இறங்குகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் தாக்கத்தில் இருந்து சுப்மன் கில் இன்னும் மீளாததால் இந்த ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காது என்பதால் அஸ்வினுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்படலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி ஏமாற்றிய கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் மூன்று பேரும் ரன்வேட்டை நடத்தும் வேட்கையுடன் உள்ளனர். மொத்தத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக உள்ள இந்தியா 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 156 ரன்னில் சுருண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் பிரதான பலமே சுழற்பந்து வீச்சு தான். எனவே ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகியோரது பந்து வீச்சு எடுபட்டால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'வலை பயிற்சியில் நாங்கள் சுழற்பந்து வீச்சை அதிகமாக எதிர்கொண்டு தயாராகுகிறோம். எங்களது பயிற்சி களத்தில் ரஷித்கான், முகமது நபி, நூர் அகமது, முஜீப் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம். எனவே வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தை விட இந்தியாவிடம் சுழற்பந்து வீச்சை சிறப்பாக சமாளிப்போம் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதற்கு முன்பு 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் இந்தியா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் சமனில் (டை) முடிந்தது.

இதே டெல்லி மைதானத்தில் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 3 வீரர்களின் சதத்தோடு 428 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. டெல்லி மைதானத்தில் இந்தியா இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 13-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.


Next Story