அந்த 3 வீரர்கள் இல்லையெனில் இந்தியாவை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்திவிடும் - பாக்.முன்னாள் வீரர்


அந்த 3 வீரர்கள் இல்லையெனில் இந்தியாவை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்திவிடும் - பாக்.முன்னாள் வீரர்
x

பாகிஸ்தான் அணிக்கு இந்தியர்கள் யாரும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என தன்வீர் அகமது தெரிவித்துள்ளார்.

கராச்சி,

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது வரலாற்று தோல்விக்கு காரணமானது. அதனால் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியர்கள் யாரும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இல்லையெனில் இந்திய அணியை மிகவும் எளிதாக பாகிஸ்தான் தோற்கடித்து விடும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கிருந்து வருங்காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை என்னவாகும் என்பதை உங்களால் பார்க்க முடியும். அவர்களின் பவுலிங் வரிசை வேண்டுமானால் வேலை செய்யலாம். ஆனால் பேட்டிங் வரிசை வருங்காலத்தில் அசத்துவது மிகவும் கடினம். ஏனெனில் தற்சமயத்தில் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்களின் திறன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வருங்காலத்தை நோக்கி எடுத்துச் செல்லும் அளவுக்கு இல்லை. அவர்கள் சொந்த மண்ணில் பிளாட்டான பிட்ச்களில் அடிப்பார்கள்.

ஆனால் பந்து சுழலக்கூடிய மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய பிட்ச்களில் பேட்டிங் செய்யக்கூடிய திறமை இந்திய இளம் பேட்ஸ்மேன்களிடம் இல்லை. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் ரன்கள் அடித்திருக்கலாம். 2, 3வது போட்டியிலும் அடித்திருக்கக்கூடிய ரன்களே இலக்காக இருந்தன. எனவே முதலில் உங்களுடைய சொந்த செயல்பாடுகளை பற்றி பாருங்கள். பின்னர் பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனைகளை கொடுங்கள். ஒருவேளை விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் எங்களுக்கு எதிராக விளையாடாமல் இருந்தால் இந்திய அணியை பாகிஸ்தான் எளிதில் தோற்கடிக்கும்" என்று கூறினார்.


Next Story