நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்தியா...!


நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்தியா...!
x

Image Courtesy: AFP 

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ராய்ப்பூர்,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி 24ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியா 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி முடிவடைந்ததும் ஒருநாள் அணிகளுக்கு கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிட்ட தரவரிசையின் படி இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் ஆஸ்திரேலியா (112 புள்ளிகள்), 5வது இடத்தில் பாகிஸ்தான் (106 புள்ளிகள்) அணிகள் உள்ளன.

6 முதல் 10 இடங்களில் தென் ஆப்பிரிக்கா (100 புள்ளிகள்), வங்காளதேசம் (95 புள்ளிகள்), இலங்கை (88 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (71 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் ( 71 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன.

இந்த போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 11 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story