கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்..? இன்று மோதல்


கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்..? இன்று மோதல்
x

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 59 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

அதே சமயம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. முன்னதாக இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் கொல்கத்தாவிடம் கண்ட முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேட மும்பை அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.


Next Story