வெற்றியுடன் லீக் சுற்றை நிறைவு செய்யுமா இந்தியா.? கனடா அணியுடன் இன்று மோதல்


வெற்றியுடன் லீக் சுற்றை நிறைவு செய்யுமா இந்தியா.? கனடா அணியுடன் இன்று மோதல்
x

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் கனடாவுடன் இன்று மோதுகிறது.

லாடெர்ஹில்,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, கனடாவுடன் (ஏ பிரிவு) மோதுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வரிசையாக போட்டுத்தாக்கி 6 புள்ளிகளுடன் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எனவே இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். ஜெய்ஸ்வால், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நடப்பு தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ரோகித்சர்மா - விராட் கோலி ஜோடி எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. கோலி 1, 4, 0 என்று வீதமே ரன் எடுத்து சொதப்பியுள்ளார். இதனால் கோலி பேட்டிங்கில் மறுபடியும் 3-வது வரிசைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா முதல் 3 ஆட்டங்களில் முழுக்க முழுக்க பந்து வீச்சுக்கு உகந்த நியூயார்க் ஆடுகளத்தில் ஆடியது. 119 ரன்களே இந்தியாவின் அதிகபட்சமாகும். ஆனால் லாடெர்ஹில் ஆடுகளம் அதில் இருந்து வித்தியாசமானது. பேட்டிங்குக்கு அனுகூலமானது. தவிர கனடா அனுபவமற்ற அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்மழை பொழிய வாய்ப்புள்ளது.

கனடா அணியை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று ஆட்டங்களிலும் 20 ஓவர் முழுமையாக தாக்குப்பிடித்த கனடா, பலம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக முடிந்த வரை கடும் சவால் அளிக்க முயற்சிக்கும். இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

லாடெர்ஹில் ஸ்டேடியத்தில் இந்திய அணி இதற்கு முன்பு எட்டு 20 ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடி இருக்கிறது. இதில் இந்தியா 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. 2016-ம் ஆண்டில் இங்கு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 245 ரன்கள் குவித்ததும், அந்த இலக்கை இந்தியா நெருங்கி வந்து ஒரு ரன்னில் தோற்றதும் நினைவு கூரத்தக்கது.

முந்தைய நாள் போன்றே இன்றைய ஆட்டத்துக்கும் மழை அபாயம் உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கு 55 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், பும்ரா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ் அல்லது குல்தீப் யாதவ்.

கனடா: ஆரோன் ஜான்சன், நவ்னீத் தலிவால், பர்கத்சிங், நிகோலாஸ் கிர்டான், ஸ்ரேயாஸ் மோவா, தில்பிரீத் பஜ்வா அல்லது ரவீந்தர்பால் சிங், திலோன் ஹேலிகர், சாத் பின் ஜாபர் (கேப்டன்), ஜூனைட் சித்திக், கலீம் சனா, ஜெரிமி கார்டன்.


Next Story