இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் - ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்


இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் - ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்
x

image courtesy; AFP

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 7 - 16 வரையிலான மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அளவுக்கு பந்து வீசும் திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "நாங்கள் சமீப காலங்களில் நிறைய டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதனால் ஒரு அணியாக டி20 கிரிக்கெட்டில் செட்டாக எங்களுக்கு சற்று நேரம் தேவைப்படுகிறது.

கடந்த வருடம் ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கு தயாராக எங்களை நாங்கள் கட்டமைத்தோம். எனவே நாளைய போட்டியில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் நன்றாக அடிக்க வேண்டும். கடந்த போட்டிகளில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதை நிறுத்துவதற்கு எதிரணி தடுமாறியதை நாங்கள் பார்த்தோம்.

சொல்லப்போனால் மொகாலியில் நடைபெற்ற போட்டியில் கடைசி 10 ஓவர்களில் நாங்கள் 110 ரன்கள் அடித்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் பந்து வீச்சில் தடுமாறினோம். எனவே இம்முறை மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது நாங்கள் அதிக அழுத்தத்தை போட வேண்டும். குறிப்பாக முதல் போட்டியில் நாங்கள் செய்ததை 2-வது போட்டியில் செய்ய தவறினோம். எனவே உலகக்கோப்பை போன்ற தொடரில் போட்டியிடுவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக அசத்த வேண்டும்" என்று கூறினார்.


Next Story