தோனி அணியிலிருந்து என்னை நீக்கிய போது ஓய்வு பெறலாம் என நினைத்தேன் - சேவாக் பேச்சு


தோனி அணியிலிருந்து என்னை நீக்கிய போது ஓய்வு பெறலாம் என நினைத்தேன் - சேவாக் பேச்சு
x

Image Courtesy : AFP 

2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி சேவாக் பரபரப்பாக பேசியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர்.

இவர் தோனியை குறிப்பிட்டு 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பரபரப்பாக பேசியுள்ளார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 4 போட்டியில் சேவாக் அரைசதம் அடிக்கவில்லை. இதனால் அதற்கு அடுத்த போட்டியில் சேவாக்கை அணியின் பிளெயிங் லெவனில் இருந்து தோனி நீக்கினார். அடுத்த போட்டியில் சச்சின், கம்பீர், ராபின் உத்தப்பா தொடக்கத்திலும், ரோகித் சர்மா, யுவராஜ், தோனி ஆகியோர் நடுவரிசையிலும் விளையாடினர்.

இந்த சம்பவம் குறித்து ஷேவாக் கூறுகையில், " அந்த ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகளில் என்னால் அவ்வளவு ரன்கள் எடுக்க முடியவில்லை. அதனால் எம்எஸ் தோனி என்னை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன் என்று நினைத்தேன்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் தான் என்னை தடுத்து நிறுத்தி ஓய்வு பெறாமல் இருக்க செய்தார். அப்போது சச்சின் என்னிடம் 'இது உங்கள் வாழ்க்கையின் மோசமான கட்டம். காத்திருங்கள், இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள், நன்றாக யோசித்து, அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யுங்கள்' என தெரிவித்தார்.

இது குறித்து அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் பேசினேன். என்னை தொடர்ந்து அணியில் எடுக்க வேண்டும் என்று உறுதி கொடுங்கள், இல்லையேனில் ஓய்வு பெறுகிறேன் என்று கேட்டேன். பின்னர் இது குறித்து ஸ்ரீகாந்த் தோனியிடம் பேசினார். அதன் பிறகு தோனி என்னிடம் நீங்கள் அனைத்து போட்டியிலும் விளையாடுவீர்கள் என உறுதி அளித்தார். நல்லவேளையாக நான் அந்த நேரத்தில் எனது ஓய்வை அறிவிக்கவில்லை" என சேவாக் தெரிவித்தார்.


Next Story