'சதத்தை விட அணியின் நலனே முக்கியம்'விராட் கோலி பேட்டி


சதத்தை விட அணியின் நலனே முக்கியம்விராட் கோலி பேட்டி
x

டெஸ்டில் ஏறக்குறைய 3½ ஆண்டுக்கு பிறகு சதத்தை எட்டிய கோலி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஆமதாபாத்,

ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய வீரர் விராட் கோலி 186 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். அவரது 28-வது சதம் இதுவாகும். டெஸ்டில் ஏறக்குறைய 3½ ஆண்டுக்கு பிறகு சதத்தை எட்டிய கோலி நிம்மதி பெருமூச்சு விட்டார். அவருடன் கலந்துரையாடிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நீண்ட காலம் டெஸ்டில் சதம் அடிக்காதது எந்த அளவுக்கு மனதளவில் கடினமாக இருந்தது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:-

ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் வளரும் போது மூன்று இலக்கம் ஸ்கோரை எட்டுவது மிகவும் தேவையாகிறது. எல்லா வீரர்களுமே ஒரு கட்டத்தில் இதை உணர்ந்து இருப்பார்கள். அதில் நானும் விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் நான் 40-45 ரன்களில் திருப்தி அடையும் பேட்ஸ்மேன் கிடையாது. சிறப்பான செயல்பாட்டால் அணியை முன்னெடுத்து செல்வதே எப்போதும் எனது நோக்கமாக இருக்கும். இந்த டெஸ்டில் நான் 40 ரன் எடுத்த போது, இந்த முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து அணிக்கு உதவ முடியும் என்பது எனக்கு தெரிந்து விட்டது.

அணிக்கு என்னால் ஏன் பெரிய ஸ்கோர் குவிக்க முடியவில்லை என்றால், நான் எப்போதும் அணியின் நலனுக்கு முன்னுரிமை அளித்து கடினமான வெவ்வேறு சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடுவதே இதற்கு காரணமாகும். நான் சாதனைக்காக ஒரு போதும் ஆடுவதில்லை. உங்களால் எப்படி தொடர்ச்சியாக சதங்கள் அடிக்க முடிகிறது என்று நிறைய பேர் கேட்கிறார்கள். 'நீண்ட நேரம் பேட்டிங் செய்து முடிந்தவரை அணிக்காக நிறைய ரன் குவிப்பதே எனது குறிக்கோள். அவ்வாறு செய்யும் போது சதங்கள் வந்து விடுகிறது' என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த முறை நிலைமை கொஞ்சம் சிக்கலாகத் தான் இருந்தது. ஓட்டல் அறையில் இருந்து வெளியே வரும் போது, லிப்ட் ஊழியர் முதல் பஸ் டிரைவர் வரை எல்லோரும் நான் சதம் அடிக்க வேண்டும். அது தான் எங்களது விருப்பம் என்று கூறினார்கள். அதுவே எனது மனதில் ஓடத் தொடங்கியது. ஆனால் நான் நீண்ட காலம் விளையாடுவதால், இது போன்ற சிக்கல்களையும், சவால்களையும் சமாளித்து வெளியே வர முடிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் இந்த சதம் அடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு கோலி கூறினார்.


Next Story