வெங்கடேஷ் ஐயர் அதிரடி...மும்பை அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா


வெங்கடேஷ் ஐயர் அதிரடி...மும்பை அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
x

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சுனில் நரைன் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து பில் சால்ட் 6 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் - நிதிஷ் ராணா இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா தனது பங்குக்கு 33 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய ரசல் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 20 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக சாவ்லா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி மும்பை பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story