டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது திருச்சி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது திருச்சி
x

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது.

இந்த நிலையில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் ஓவரிலேயே பிரதீப்பின் (1 ரன்) விக்கெட்டை இழந்து தடுமாற்றத்துடன் தொடங்கியது. வேகம் காட்டிய கேப்டன் ஹரி நிஷாந்த் 25 ரன்களில் (15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்ததும் அவர்களின் உத்வேகம் தளர்ந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இருப்பினும் கடைசி கட்டத்தில் எல்.விக்னேஷ் (32 ரன், 5 பவுண்டரி), கே.மோனிஷ் (24 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்து அணியை 140 ரன்களை கடக்க வைத்தனர்.

20 ஓவர்களில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. திருச்சி தரப்பில் கட்டுக்கோப்புடன் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் அஜய் கிருஷ்ணா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திருச்சி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் 20 ரன்னிலும், முரளிவிஜய் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட் களம் திரும்பிய முரளிவிஜயின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவல் கொண்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆகிப்போனார்.

இதன் பின்னர் நிதிஷ் ராஜகோபாலும் (64 ரன், 48 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் ஆதித்யா கணேசும் (37 ரன், நாட்-அவுட்), அருமையாக விளையாடி இலக்கை சிக்சருடன் எட்ட வைத்தனர். திருச்சி அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story