டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வெளியேற்றியது கோவை


டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வெளியேற்றியது கோவை
x

சேலம் வாழப்பாடியில் நேற்று நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை அணி டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்று மதுரை அணியை வெளியேற்றியது.

சேலம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடத்தை பிடித்த அணிகளான மதுரை பாந்தர்சும், கோவை கிங்சும் நேற்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் அருண் கார்த்திக் 47 ரன்கள் (51 பந்து, 2 பவுண்டரி) எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். கோவை தரப்பில் அபிஷேக் தன்வார், அஜித் ராம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 127 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கோவை வீரர்கள் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அந்த அணி 9.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது கங்கா ஸ்ரீதர் ராஜூ 49 ரன்களுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

கோவை அணி வெற்றி

தொடர்ந்து மழை கொட்டியதால் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி முடிவு அறியப்பட்டது. இதன்படி 9.5 ஓவர்களில் கோவை அணிக்கு 53 ரன்களே போதுமானதாக இருந்தது. இதையடுத்து கோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் பரிதாபமாக வெளியேறியது.

வெற்றி பெற்ற கோவை அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் அல்லது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகளில் ஒன்றுடன் வருகிற 29-ந் தேதி மோதும்.


Next Story