இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - யுவராஜ் சிங்


இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இதுதான் -  யுவராஜ் சிங்
x

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக யுவராஜ் சிங் பெருமை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கி இருக்கும் முக்கியமான போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக இரு தொடர்களில் விளையாடுவதை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. அதனால் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகளின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் அந்தளவுக்கு அழுத்தமான அந்தப் போட்டியில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.

குறிப்பாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2021-ல் நடைபெற்ற தொடரை தவிர்த்து எஞ்சிய அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதனால் உலகக்கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ எப்படியாவது இந்தியாவை தோற்கடித்து விட வேண்டும் என்பதே பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் பற்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார். மேலும் சமீபத்திய வருடங்களாகவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்று முன்னிலையில் இருப்பதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார். அதை இந்த வருடமும் இந்தியா தொடரும் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"அது உணர்வுகளின் போட்டியாகும். ஒருவேளை அதில் வென்றால் அதை நாங்கள் வெறித்தனமாக கொண்டாடுவோம். தோற்றாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். ஆனால் நாங்கள் வென்றால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எங்களுடன் பைத்தியக்காரத்தனமாக மோதுவதற்கு வருவார்கள். அதேபோல நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவர்கள் வருவார்கள். ஆனால் இந்திய ரசிகர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் அது மட்டுமே இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையே உள்ள வித்தியாசமாகும்.

இந்தியா - பாகிஸ்தான் அல்லது எந்த போட்டியாக இருந்தாலும் வீரர்கள் தங்களின் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். பொதுவாகவே இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் யார் போட்டி நாளன்று உணர்வுகளை கட்டுப்படுத்தி சூழ்நிலைகளில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்களே வெல்வார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளோம். அதை இந்த வருடமும் நாங்கள் தொடர்வோம் என்று நம்புகிறேன்" என கூறினார்.


Next Story