"அவரும் மனிதர் தான், தவறுகள் நடக்கும் " - ரோகித் சர்மாவை ஆதரித்து பேசிய கங்குலி..!!


அவரும் மனிதர் தான், தவறுகள் நடக்கும்  - ரோகித் சர்மாவை ஆதரித்து பேசிய கங்குலி..!!
x

Image Courtesy : BCCI / IPL  

தினத்தந்தி 24 May 2022 1:05 PM GMT (Updated: 24 May 2022 1:06 PM GMT)

ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி நிறைவு செய்தது. 5 முறை சாம்பியன் ஆன மும்பை அணி இதுவரை கண்டிராத அளவுக்கு மோசமான ஆட்டத்தை இந்த ஆண்டு வெளிப்படுத்தியது.

அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்க்கப்பட்டது. 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்திய அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கு கேப்டனாக உள்ள ரோகித் சர்மா இந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

இது குறித்து கங்குலி கூறுகையில், " எல்லோரும் மனிதர்கள் தான் அதனால் தவறுகள் நடக்கும். ஆனால் கேப்டனாக ரோஹித்தின் சாதனை சிறப்பானது. ஐந்து ஐபிஎல் பட்டங்கள், ஆசிய கோப்பையை என கேப்டனாக அவரது சாதனை மகத்தானது. அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்பதால் தவறுகள் நடக்கும்" அவர் தெரிவித்தார்.

விராட் கோலி மற்றும் ரோகித் இருவர் குறித்தும் கங்குலி பேசுகையில், "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் அதிகமான கிரிக்கெட்டை விளையாடுவதால் சில சமயங்களில் ஃபார்ம் இல்லாமல் போய்விடும். குறிப்பாக பெங்களூரு அணிக்காக தேவைப்படும் போது கடந்த ஆட்டத்தில் கோலி சிறப்பாக விளையாடினார். " என கங்குலி பேசினார்.


Next Story