10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்


10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்
x

முதலாவது நாளில் நடைபெறும் ஆட்டங்களில் ஜிம்பாப்வே-நேபாளம், வெஸ்ட்இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

ஹராரே,

உலகக் கோப்பை தகுதி சுற்று

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடக்கிறது.

10 அணிகள் பங்கேற்பு

ஹராரே, புலவாயோ ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குள் நுழையும். 'சூப்பர் சிக்ஸ்' சுற்றில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் தங்களது எதிர்பிரிவில் இருந்து முன்னேறிய 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

தொடக்க லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. 'சூப்பர் சிக்ஸ்' சுற்று வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 7-ந் தேதி வரையும், 7 முதல் 10 இடங்களை முடிவு செய்வதற்கான ஆட்டங்கள் வருகிற 30-ந் தேதி முதல் ஜூலை 6-ந் தேதி வரையும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 9-ந் தேதி ஹராரேயில் அரங்கேறுகிறது.

இந்த போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை நூலிழையில் இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி சமீபத்தில் சார்ஜாவில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அத்துடன் உலகக் கோப்பை தகுதி சுற்றுக்கான பயிற்சி ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்தையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. இதேபோல் இலங்கை அணி அண்மையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் தகுதி சுற்றுக்கான பயிற்சி ஆட்டங்களில் அமெரிக்கா, நெதர்லாந்தையும் தோற்கடித்து நல்ல நிலையில் இருக்கிறது. உள்ளூர் சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி ஜிம்பாப்வே அணியும் கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 2 ஆட்டங்கள்

தொடக்க நாளான இன்று ஹராரேயில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, ரோகித் பாடெல் தலைமையிலான நேபாள அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி, மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியை சந்திக்கிறது. இந்த அணிகள் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்டங்களில் ஜிம்பாப்வே, வெஸ்ட்இண்டீஸ் அணிகளின் கை ஓங்கும் என்று தெரிகிறது. இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story