வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன் இலக்கு


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன் இலக்கு
x

இந்த டெஸ்டில் வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மிர்புர்,

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 382 ரன்களும், ஆப்கானிஸ்தான் 146 ரன்களும் எடுத்தன. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. ஜாகிர் ஹசன் (54 ரன்), நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (54 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய வங்காளதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன்வேட்டை நடத்தினர். ஜாகீர் ஹசன் (71 ரன்) ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோவும், முன்னாள் கேப்டன் மொமினுல் ஹக்கும் இணைந்து ஸ்கோருக்கு மேலும் வலுவூட்டினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஹூசைன் ஷன்டோ இந்த இன்னிங்சிலும் சதம் அடித்தார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய 2-வது வங்காளதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 124 ரன்களில் (151 பந்து, 15 பவுண்டரி) ஜாகீர் கான் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் (3 பந்தில் 8 ரன்) அதே ஓவரில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து களம் புகுந்த கேப்டன் லிட்டான் தாசின் துணையுடன் மொமினுல் ஹக் தனது 12-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 80 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து, எதிரணிக்கு 662 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மொமினுல் ஹக் 121 ரன்னுடனும் (145 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), லிட்டான் தாஸ் 66 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி (13 ரன்), தஸ்கின் அகமது வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டில் தாக்கிய அதிர்வில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார். இன்று, 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்டில் வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.


Next Story