டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியாவின் 48 வருட மோசமான உலக சாதனை பட்டியலில் இணைந்த பாகிஸ்தான்


டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியாவின் 48 வருட மோசமான உலக சாதனை பட்டியலில் இணைந்த பாகிஸ்தான்
x

Image Courtesy: AFP 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி,

ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

குறிப்பாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டை இழந்து 448 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் பின் வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 565 ரன்கள் குவித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 30 ரன் இலக்குடன் ஆடிய வங்காளதேசம் 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 48 வருட மோசமான உலக சாதனை பட்டியலில் பாகிஸ்தான் இணைந்துள்ளது.

அதாவது, டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்த பின்பும் கடைசியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அணி என்ற இந்தியாவின் மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 306/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து இந்திய டெயில் எண்டர்களை காப்பாற்றுவதற்காக கேப்டன் பிசன் சிங் பேடி வேண்டுமென்றே டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இறுதியில் அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது. அதேபோல் தற்போது பாகிஸ்தானும் தோல்வி கண்டுள்ளது. அப்படி 48 வருடத்துக்கு முன் இந்தியா படைத்த மோசமான சாதனை பட்டியலில் பாகிஸ்தான் இணைந்துள்ளது.


Next Story