டி20 உலகக்கோப்பை; வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் பாகிஸ்தான் - அயர்லாந்து அணியுடன் இன்று மோதல்


டி20 உலகக்கோப்பை; வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் பாகிஸ்தான் - அயர்லாந்து அணியுடன் இன்று மோதல்
x

Image Courtesy: AFP

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

லாடெர்ஹில்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

இந்த பிரிவில் இந்தியா, அமெரிக்கா அணிகள் முறையே முதல் 2 இடங்களை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின விட்டன. பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எனவே பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் இடையிலான இன்றைய ஆட்டம் சம்பிரதாய மோதலாகும்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (கனடாவுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (அமெரிக்கா, இந்தியா அணிகளுக்கு எதிராக) 2 புள்ளி பெற்றுள்ளது. இதேபோல் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி 2 தோல்வி (இந்தியா, கனடா அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (அமெரிக்காவுக்கு எதிராக) என்று ஒரு புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது.

இதே நாளில் 'டி' பிரிவில் 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்து விட்டது. எஞ்சிய ஒரு இடத்தை பிடிக்க வங்காளதேசம், நெதர்லாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கிங்ஸ்டனில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் வங்காளதேசம்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

செயின்ட் லூசியாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். அத்துடன் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி தோல்வியை சந்திக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் கிட்டும்.

இவ்விரு ஆட்டங்களும் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும், இந்திய நேரப்படி மறுநாள் (திங்கட்கிழமை) முறையே அதிகாலை 5 மணி மற்றும் காலை 6 மணிக்கே தெரியும்.


Next Story