டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்


டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
x

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.

பிரிட்ஜ்டவுன்,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிரிஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கும் 6-வது லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற கையோடு வெஸ்ட் இண்டீசுக்கு வந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லே, ஜோப்ரா ஆர்ச்சர் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. எனவே இங்கிலாந்து வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியில் பேட்டிங்கில் மேத்யூ கிராஸ், ஜார்ஜ் முன்சி, மைக்கேல் லீஸ்க், பந்து வீச்சில் கிறிஸ் சோல், மார்க் வாட், பிராட் கரி நன்றாக ஆடக்கூடியவர்கள். ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இருக்கிறார்கள். அதனால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் டல்லாசில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- நேபாளம் (டி பிரிவு) அணிகள் சந்திக்கின்றன. இன்றைய ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story