டி20 உலகக்கோப்பை: சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா


டி20 உலகக்கோப்பை: சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா
x

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கயானா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கயானாவில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் மோதின.

மழையால் 1¼ மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

நடப்பு தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 7-வது வெற்றி ( லீக் சுற்றில் 3, சூப்பர் 8 சுற்றில் 3) இதுவாகும். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 8 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தினால் அந்த சாதனையை சமன் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story