டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் தேர்வுக்குழுவில் மாற்றம்
டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லாகூர்,
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.
குறிப்பாக முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் இந்தியாவிடம் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இது போக சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது.
இந்த தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் தேர்வு குழுவில் இடம் பெற்று இருந்த முன்னாள் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக் ஆகியோரை அதிரடியாக நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதிய தேர்வாளர் நியமனம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் முகமது யூசுப், ஆசாத் ஷபிக் ஆகியோர் தேர்வாளர்களாக தொடருகிறார்கள்.