டி20 உலகக்கோப்பை: 3 இடங்களுக்கு போட்டி போடும் 9 அணிகள்...முழு விவரம்


டி20 உலகக்கோப்பை: 3 இடங்களுக்கு போட்டி போடும் 9 அணிகள்...முழு விவரம்
x

image courtesy: AFP 

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 5 அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

சென்னை,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் சுற்று வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 இடங்களுக்கு 9 அணிகளுக்கிடையே போட்டி காணப்படுகிறது.

அவை எந்த அணிகள்?, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்களை இங்கு காண்போம்:-

பிரிவு -ஏ

ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

1. அமெரிக்கா: 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து அமெரிக்கா தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோத உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் கை விடப்பட்டாலோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். மாறாக தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

2. பாகிஸ்தான்: 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி 1 வெற்றி கண்டுள்ள பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற, அமெரிக்கா அணியை அயர்லாந்து வீழ்த்த வேண்டும். அதே நேரம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். மாறாக அமெரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தானாலோ லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான்.

3. அயர்லாந்து: 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ள அயர்லாந்து, மற்ற போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

4. கனடா: 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள கனடா, தனது கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே கனடாவின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும். இதனால் அதன் வாய்ப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

பி - பிரிவு:

இந்த பிரிவில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. மேலும் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் வெளியேறிவிட்டன. இந்த பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.

5. ஸ்காட்லாந்து: 3 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகள் பெற்றுள்ள ஸ்காட்லாந்து கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். மாறாக தோல்வியடைந்தால் இங்கிலாந்து - நமீபியா போட்டியின் முடிவுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

6. இங்கிலாந்து: நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பெரிய வெற்றியை பெற வேண்டும். அதேவேளையில் ஸ்காட்லாந்து தோல்வியடைந்தால் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

சி பிரிவு

இந்த பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், உகாண்டா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் வெளியேறிவிட்டன.

டி பிரிவு

இதில் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இலங்கை முதல் அணியாக வெளியேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு வங்காளதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

7. வங்காளதேசம்: 3 போட்டிகளில் 2 வெற்றிகள் ஒரு தோல்வி கண்டுள்ள வங்காளதேசம், அடுத்த சுற்று வாய்ப்பில் முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். மாறாக தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

8. நெதர்லாந்து: 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி 2 தோல்விகள் கண்டுள்ள நெதர்லாந்து மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் பெரிய வெற்றி பெற்று நல்ல ரன் ரேட்டை பெற வேண்டும். அதேவேளை வங்காளதேசம் மற்றும் நேபாளம் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும்.

9. நேபாளம்: 2 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி பெற்றுள்ள நேபாளம், மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.


Next Story