வங்காளதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி


வங்காளதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
x

சூப்பர் 12 சுற்றில் வங்காளதேச அணி 16.3 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

சிட்னி,

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகள் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்- பவுமா களமிறங்கினர்.

பவுமா தொடக்கத்திலேயே 2 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து டி காக்- ரூசோவ் ஜோடி இணைந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்கமுடியாமல் வங்காளதேச பந்துவீச்ச்சாளர்கள் திணறினர்.

டி காக் 63 ரன்னில் அவுட்டானார். 2 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்களை இந்த ஜோடி குவித்தது. மறுபுறம் தனது அதிரடியை தொடர்ந்த ரூசோவ், சதமடித்து அசத்தினார். இந்த டி20 உலகக்கோப்பையின் முதல் சதம் இதுவாகும். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் 109 ரன்களை குவித்தார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நஜ்முல் ஹொசேன் 9 ரன்னிலும், சவுமியா சர்கார் 15 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு ரன்னில் வெளியேறினார்.

வங்காளதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இறுதியில் வங்காளதேச அணி 16.3 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நோர்க்கியா 4 விக்கெட்டும், ஷம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபாரவெற்றி பெற்றது


Next Story